கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இரட்டையர்களான முகமது அசாருதீன் மற்றும் முகமது நசுருதீன். கீழக்கரையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் மீது கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக சம்மன் அளிப்பதற்காக கீழக்கரை எஸ்ஐ கோட்டைசாமி தலைமையிலான போலீசார், நேற்று அவர்களது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டிற்கு அருகே உள்ள குடோனில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட சுமார் 720 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் போலீசார் கீழக்கரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக பதுக்கி வைத்தது தெரிய வந்தது. மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மதிப்பு ரூ.1.75 கோடி என்று கூறப்படுகிறது.
Advertisement