மண்டபம் : இலங்கைக்கு கடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட, ரூ.80 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி தெற்கு கடலோரப் பகுதியில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நாட்டு படகிலிருந்து பிளாஸ்டிக் கேன்களை சிலர் கரையில் இறக்கி வைத்துள்ளனர். காவல் படை வீரர்கள் அவர்களை நோக்கி சென்றபோது நாட்டு படகுடன் அவர்கள் கடலுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் கரையில் இறக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை கைப்பற்றி மண்டபம் கடலோர காவல் படை முகாம் கொண்டு வந்தனர். அங்கு மதிப்பீடு செய்ததில் 200 கிலோ இருந்ததாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் வரை இருக்கும் எனவும், இலங்கைக்கு கடத்துவதற்காக சேகரித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இதுகுறித்து கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.