குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 12ம் தேதி பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாணவிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாணவி பள்ளி முடிந்து மாலை வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் தந்தை, மறுநாள் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதபோது அவரது மகளிடம் தகராறு செய்த மாணவியை சரமாரியாக தாக்கினாராம். இதைப்பார்த்ததும் சக மாணவிகள் அலறி அடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த ஆசிரியர்கள் அந்த நபரை வெளியேற்றி உள்ளனர். அப்போது ஆசிரியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement