தண்டையார்பேட்டை: பாரிமுனை வடக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சந்திரமோகன் (31) இவர், கடந்த மாதம் 30ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அங்கிருந்து, கடந்த 1ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த இரண்டே கால் சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சந்திரமோகனின் உறவினர்களான கிளைவ் பேட்டரி பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (40), மணிமாறன் (22) ஆகியோர், சந்திரமோகன் ஊருக்கு சென்றதை அறிந்து, அவரது வீட்டிற்கு சென்று, ஜன்னல் அருகே வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிலிருந்து நகையை திருடி சென்றது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து 5 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.