சேலம்: சேலத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., வருமானத்திற்கு அதிகமாக ரூ.3கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், ஓசூர் வீட்டிலிருந்து சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சேலம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக கிருபானந்தம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.
இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர், ஓசூர், சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் சொத்து மற்றும் வீடுகளை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக ரூ.3 கோடிக்கும் மேல் அவர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்தது. தற்போது அவர் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் வேலை செய்கிறார். இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.கிருபானந்தம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்தார். நேற்று ஓசூரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்து தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் ரூ.3 கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.