Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியார் பல்கலை.யில் தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் மாணவர்களிடம் போலீஸ் விசாரணை: வீடியோவில் பதிவு செய்தனர்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தீன் தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே முறைகேடுகளும், ஊழல் குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து வருகிறது. துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அவர் ஓய்வு பெற்றும், பணி நீட்டிப்பு வழங்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தீன்தயாள் உபாத்யா திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு வழங்கிய பணத்தை முறையாக செலவு செய்யாமல், மோசடி செய்ததாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் மாணவர்கள் புகார் செய்தனர். தங்குவதற்கு போதிய இடவசதி செய்து தரவில்லை, தரமான உணவு வழங்கவில்லை. மேலும் ஜாதி பெயரைச்சொல்லி இழிவாக பேசியதாகவும் புகாரில் கூறியிருந்தனர். இது தொடர்பாக, வருகிற 30ம்தேதிக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், சேலம் மாநகர காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து புகார் தெரிவித்த மாணவர்களிடம் விசாரணை நடத்த, 12 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். நேற்று காலை 11மணியளவில், புகார் கொடுத்த 10 மாணவர்கள், சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாணவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, அதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் சக்திவேல் நிருபர்களிடம் கூறுகையில், ‘தீன்தயாள் உபாத்யா மேம்பாட்டு திட்டத்தில், ஒன்றிய அரசு 2.50 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஆனால் தங்கும் இடம் கூட ஏற்படுத்தி தரவில்லை. மேலும் மாணவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதனையும் வழங்காமல், வழங்கி விட்டதாக கூறி மோசடி செய்துள்ளனர்.

இதுபற்றி மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் புகார் அளித்தனர். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்ததன் பேரில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பெரும் மோசடிக்கு காரணமான பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்த வேண்டும்,’ என்றார்.