ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி தவெக நிர்வாகி யூ-டியூபர் விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. யூடியூபரான இவர், தவெக கட்சியில் நிர்வாகியாகவும் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது நண்பர் தங்கைக்கு வாட்ஸ் அப் மூலம் காதல் வலைவிரித்து வசமாக சிக்கினார். அப்போது அவரது நண்பர்கள் இணைந்து விஷ்ணுவை தி.நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதேநேரம் அவரது மனைவி அஸ்மிதா பிரிந்து வாழ்ந்து வரும் என் மீது அவதூறு பரப்பி துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது விஷ்ணு அவரது மனைவிபற்றி திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது தெரியவந்தது.
அதைதொடர்ந்து விஷ்ணு மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 19ம் தேதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் விஷ்ணு ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.62 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தவெக நிர்வாகி விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் உள்ள அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து விஷ்ணுவிடம் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தான் விஷ்ணு எத்தனை கோடி வரை மோசடி செய்துள்ளார் என்பது குறித்து தெரியவரும்.


