ஆன்லைன் செயலியில் முதலீடு செய்தால் 2 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி: சேலத்தில் 6 பேர் சிக்கினர்
சேலம்: சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில், நேற்று கிரிப்டோ கரன்சி வர்த்தக கூட்டம் நடந்தது. கோவா, கேரளாவை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கிரிப்டோ கரன்சி என்ற தனி செயலி உருவாக்கி, ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், இரண்டு மாதத்தில் ரூ.2 லட்சமாக கிடைக்கும் என்றும், ஒரு ஆண்டுக்கு அந்த பணத்தை எடுக்கவில்லை என்றால், ரூ.1 கோடி வரை கிடைக்கும் என்றும் கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கூறப்படும் தகவல்கள் மோசடியானவை என்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (47) என்பவர் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த கூட்டத்தை நடத்தியவர்கள் போலியாக ஒரு செயலியை உருவாக்கி, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால், பல லட்சம் கிடைக்கும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு தெரியவந்தது. அவர்கள் ஏற்கனவே திருச்சி, கோவையில் இதுபோல் கூட்டம் நடத்தி, சுமார் ரூ.100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து, கோவாவை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.