வேலூர்: பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கணவருடன் பயணித்துள்ளார். வேலூருக்கு முன் மாதனூர் பகுதியில் உணவுக்காக பஸ்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண்ணும் கணவரும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பஸ்சில் ஏறி உள்ளனர். ஒரு வாலிபர் அந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதை கவனித்த இளம்பெண் அவரிடம் ஏன் போட்டோ எடுத்தீர்கள் என்று கேட்டு செல்போனை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அவர் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் செல்போனை பெண்ணின் கணவர் பறித்து, அதில் இருந்த மனைவியின் போட்டோக்களை அழித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆம்னி பஸ் வேலூருக்கு வந்ததும் வேலூர் வடக்கு போலீசார் பஸ்சில் இருந்த அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சையது இத்ராஸ் (27) என்பதும், அவரது பையில் கட்டுக்கட்டாக ரூ.16 லட்சம் பணம் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து சையது இத்ராஸை கைது செய்து, அவர் கொண்டு வந்த பணம் ஹவாலா பணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.