Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகாரியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி ரூ.2.30 லட்சம் பறிப்பு: பெண்கள் உட்பட 3 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அஞ்சலக அதிகாரியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி ரூ.2.30 லட்சம் பறித்த பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூரை சேர்ந்தவர் 50 வயதுடைய அஞ்சலக அதிகாரி. இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை பராமரிப்பதற்காக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி(35) என்ற சூசையம்மாள் நடத்தி வரும் ஹோம்கேர் நிறுவனத்தை அஞ்சலக அதிகாரி தொடர்பு கொண்டுள்ளார்.

தொடர்ந்து, அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் கிருஷ்ணகிரி மாவட்டம், மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி நளினி(38) என்பவரை, அதிகாரியின் தாயாரை பராமரிப்பதற்காக அனுப்பி வைத்துள்ளார்.அதன்படி, நளினி தினமும் அதிகாரி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அதிகாரிக்கும், நளினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நளினி, அதிகாரியை தனது செல்போனில் நிர்வாணமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

பின்னர், அந்த நிர்வாண வீடியோவை செல்விக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, செல்வி அந்த வீடியோவை அஞ்சலக அதிகாரிக்கு அனுப்பி வைத்து ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். பணத்தை தர மறுத்தால் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரி ரூ.2.30 லட்சத்தை செல்வியிடம் கொடுத்தாராம். மேலும், மீதி பணத்தை தரும்படி கேட்டு அடிக்கடி போன் செய்து மிரட்டி வந்தாராம். இதனால் அதிகாரி, சமீபகாலமாக செல்வியின் செல்போன் அழைப்பை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வி, தனது நிறுவனத்தில் பணிபுரியும் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த விமல்ராஜ்(30) என்பவருக்கு வீடியோவை அனுப்பி, அதிகாரியிடம் மீதி பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். தொடர்ந்து விமல்ராஜ், அதிகாரி வீட்டிற்கு சென்று வீடியோவை காட்டி பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலக அதிகாரி இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, ஹோம்கேர் நிறுவன உரிமையாளர் செல்வி, நளினி மற்றும் விமல்ராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர், 3 பேரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்‌‌.அரசு அதிகாரியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பெண்கள் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.