Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.3 கோடி ரொக்கம், 200 பவுன் நகை, வீட்டை மிரட்டி வாங்கிய நாம் தமிழர் பெண் பிரமுகர்: டாஸ்மாக் பார் ஊழியருடன் கள்ளக்காதலால் ரகசிய திருமணம்

கும்பகோணம்: நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவரை சரமாரியாக வெட்டிய 2வது கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாநல்லூர் ஏ.கே.வி நகரை சேர்ந்தவர்கள் ஹரிபாரதிதாஸ்-இந்திரா தம்பதி. இவர்களது மகன் ரோக்கேஷ் (43). சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவருக்கும், கும்பகோணம் பழைய அரண்மனை தெருவை சேர்ந்த ராஜன்-நிர்மலா தம்பதியின் இளைய மகள் திவ்யாவுக்கும் (35) கடந்த 15.5.2013ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயது மகள் உள்ளார். நாம்தமிழர் கட்சி பிரமுகரான திவ்யா, கடந்த 2022ல் கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் அந்த கட்சி சார்பாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரோக்கேஷை, கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் ரோக்கேஷ் தெரிவித்ததாக போலீசார் கூறியது வருமாறு:

சிங்கப்பூரில் ரோக்கேஷ் பணியாற்றி வந்த நிலையில், அவரை சந்திக்க அவ்வப்போது டூரிஸ்ட் விசாவில் மனைவி திவ்யா சிங்கப்பூர் சென்று வந்தார். அவ்வாறு வரும்போது சிறுக சிறுக 200 பவுன் தங்க நகைகளை கணவரிடமிருந்து வாங்கி வந்துள்ளார். மேலும், ரோக்கேஷ் தனது வங்கி கணக்கில் இருந்து, திவ்யாவின் வங்கி கணக்கிற்கு சுமார் ₹2 கோடியே 81 லட்சம் அனுப்பியுள்ளார். அந்த பணத்தில் திவ்யா, தனது மற்றும் பெற்றோர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

இந்நிலையில் திவ்யாவிற்கு, டாஸ்மாக் கடை பாரில் சப்ளையராக பணிபுரியும் இன்னம்பூரை சேர்ந்த நந்தகுமார் (31) என்ற வாலிபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்த திவ்யா, கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே திவ்யா, நந்தகுமாரை இன்னம்பூர் காளியம்மன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி கிராம நடைமுறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 7-12-2023ல் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஷண்மிதா என பெயர் சூட்டினர். மேலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் கணவர் பெயராக நந்தகுமார் பெயரையே குறிப்பிட்டுள்ளார். இது முதல் கணவருக்கு தெரிந்துவிட்டதால் எங்கு சொத்து, நகைகள் போய்விடுமோ என அஞ்சி, கணவர் ரோக்கேஷிற்கு அவ்வப்போது கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில், ஒரு ரவுடி கும்பல் ரோகேஷை தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர், ரோக்கேஷை படுகொலை செய்யும் முயற்சியில் வெட்டியுள்ளனர். எனவே தனது மகள் தீப்தாவை தன்னிடம் அனுப்ப வேண்டும். மனைவி திவ்யாவுக்கு கொடுத்த ₹2 கோடியே 81 லட்சம் மற்றும் தன்னிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கிய வீடு மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க வாக்குமூலத்தில் ரோக்கேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து திவ்யாவின் 2வது கணவரான நந்தகுமார், மூப்பக்கோயிலை சேர்ந்த சிவானந்தம் (25), திருவலஞ்சுழியை சேர்ந்த அண்ணாதுரை(29) மற்றும் ஆலமன்குறிச்சியை சேர்ந்த மதன் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.