மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு மாணவன், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
மதுரை: பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலமானதால், மேலும் சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. கடந்தாண்டு ஏப்.5ல் சிவகங்கை மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தபோது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் விடைத்தாள்களின் கையெழுத்துகள் ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்கப்பட்டபோது, அந்த இரு மாணவர்களும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்கள் மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வருவதும், இருவரும் அடுத்தடுத்த பதிவெண் கொண்டவர்கள் என்பதும் தெரிந்தது. மேலும், இயற்பியல் உட்பட 3 பாடப்பிரிவுகளில் அந்த இரு மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்றதும், விடைத்தாள் திருத்தும் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுரையில் விடைத்தாள்களை பிரிக்கும் பணியின்போது, இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவை கல்வித்துறை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்ததாகவும், அவர்கள் எழுதிய தேர்வை ரத்து செய்து, 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, அரசு தேர்வுகள் இணை இயக்குநர் சார்பில், மாணவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மாணவரின் தந்தை, கடந்தாண்டு ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில், முறைகேடு புகார் குறித்து அரசுத்தேர்வு இணை இயக்குநர், மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும். பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது.
இதனடிப்படையில் 10 மாதங்களுக்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, அங்கிருந்த முதுகலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபாகரன், கணினி ஆசிரியர் பரமசிவம், இளநிலை உதவியாளர் கண்ணன், ஆய்வக உதவியாளர் கார்த்திக்ராஜா ஆகிய 4 பேரை கைது செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
வழக்கில் தொடர்புடைய மாணவர்களின் பெற்றோர்களான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வனிதா- இளஞ்செழியன், கார்த்திகா- விநாயக மூர்த்தி ஆகிய 4 பேர் மற்றும் மாணவர் ஒருவர் என, ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் 8 பேர் மதுரை மத்திய சிறையிலும், மாணவர் சிறார் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும், போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விடைத்தாள் முறைகேடு நடத்துவதற்காக கல்வித்துறையில் அதிகாரிகள், ரூ. 1 லட்சம் வரை பேரம் பேசி பணத்தை பெற்றதும் போலீசார், விசாரணையில் தெரியவந்துள்ளது.