Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதல் திருமணத்திற்கு ஓட்டலில் ஓஜி கஞ்சா பார்ட்டி விவகாரம்; ஐஏஎஸ் குடியிருப்பில் பதுங்கியிருந்த இளம்பெண் கைது: போதைப்பொருள் சப்ளை குறித்து தீவிர விசாரணை

சென்னை: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

தனது காதல் திருமணத்திற்கு உதவிய நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு மது விருந்து வைக்க முடிவு செய்தார். அதன்படி, கடந்த 13ம் தேதி தொழிலதிபர் சந்தோஷ் எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் மதுபானம், போதை பொருட்களுடன் பல லட்சம் செலவில் விருந்து ஏற்பாடு செய்தார். இதற்காக நண்பரான சினிமா துறையில் பணியாற்றி வரும் சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் மற்றும் தனது நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா மூலம் கஞ்சா மற்றும் ஓஜி கஞ்சா நண்பர்களுக்கு சப்ளை செய்தார். சில நண்பர்களுக்கு இளம் பெண்களும் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போது உயர் ரக ஓஜி கஞ்சா மற்றும் சாதாரண கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டது உறுதியானது. தொடர்ந்து போலீசார் தடை செய்யப்பட்ட ஓஜி கஞ்சா மற்றும் போதை பொருள் சப்ளை செய்ததாக காதல் திருமணம் செய்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சந்தோஷ் (27) மற்றும் கஞ்சா வாங்கி கொடுத்த சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் (34) மற்றும் போதை பொருள் பயன்படுத்திய நண்பர்களான அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தீபக் (27), புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆராதாத அக்ஷய்ராஜீ (21), திருவள்ளூரை சேர்ந்த ரோகித் (21), கிருஷ்ணபரிக் (20), மனிஷ் (22), சரத்குமார் (32), பூந்தமல்லியை சேர்ந்த மதன்குமார் (29), திருவள்ளூரை சேர்ந்த ஜிலான் (28), அம்பத்தூரை சேர்ந்த காமேஷ் (25) ஆகிய 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 மில்லிகிராம் ஓஜி கஞ்சா மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் ஓஜி கஞ்சா சப்ளை செய்த சினிமா துறையை சேர்ந்த சூளை பகுதி ஜெகதீஸ்வர் மற்றும் தொழிலதிபர் சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தொழிலதிபர் சந்தோஷின் நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா (24) என்பவர் ஆவடியில் வசித்து வந்த திருச்சி கைலாசபுரத்தை சேர்ந்த பெவன் ஆண்டனி பிரேசர் (23) என்பவர் மூலம் ஆந்திராவில் இருந்து ஓஜி வகை கஞ்சா வாங்கியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக பெவன் ஆண்டனி பிரேசர் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சா, உயர் ரக கஞ்சா புகைக்க பயன்படுத்தும் 32 ஓசிபி பேப்பர், ஒரு ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இளம்பெண் ஐஸ்வர்யா தலைமறைவாகிவிட்டார். ஆனால் போலீசார் அவரை செல்போன் சிக்னல் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் விசாரணை நடத்திய போது, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் குடியிருப்பில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அதிரடியாக நேற்று அதிகாலை ஐஸ்வர்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் வழக்கு தொடர்பான சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யா போதை பொருள் விற்பனை முகவர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொண்டு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுக்கு ஓஜி வகை கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. அது தொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.