ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பலாத்காரம் 13 வயது சிறுமி 8 மாத கர்ப்பம்: போக்சோவில் 2 வாலிபர்கள் கைது
ஆலந்தூர்: கீழ்கட்டளை பகுதியில் 13 வயது சிறுமியை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி, பலாத்காரம் செய்து, 8 மாத கர்ப்பிணியாக்கிய 2 வாலிபர்கள் போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசுப்பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். சிறுமிக்கு வயிறு வீக்கமாக இருந்ததால் ஏதேனும் கட்டியாக இருக்கக்கூடும் என்று கருதிய பெற்றோர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மடிப்பாக்கம் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சிறுமி, பாத்ரூமில் குளித்தபோது கீழ்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20) மற்றும் நிதிஷ் (19) ஆகிய இருவரும் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான அபிஷேக், நிதிஷ் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.