Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி தாளாளரிடம் ₹27.93 லட்சம் மோசடி: சென்னை வாலிபர் கைது

ஈரோடு: பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி என கூறி தனியார் பள்ளி தாளாளரிடம் ரூ.27.93 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த இளங்கோ (67). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளி தாளாளராக உள்ளார்.

இவர், ஈரோடு எஸ்பி ஜவகரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:

எனது தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும்போது அதிக நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு தெரிந்த நபர்களிடம் கடன் பெறும்போது அதற்கு ஈடாக வெற்று பத்திரம், வெற்று காசோலைகள் கொடுத்துள்ளார். அதனால், பல்வேறு வழக்குகளை எங்களது குடும்பம் சந்தித்து வருகிறது. இந்த வழக்குகளை எதிர்கொள்வதற்காகவும், வழக்குகளை நன்றாக நடத்த ஒருவரை நியமிக்க முடிவு செய்தோம்.

கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி 5வது வீதியை சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் (37) என்பவர் அறிமுகமானார். அவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அவருக்கு கீழ் அரசு துறையில் இணை செயலாளராக பணியாற்றியதாகவும், தற்போது ஐபி-ல் (இன்டலிஜன்ஸ் பியூரோ) பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிவதால், உச்சநீதிமன்றத்தில் வழக்கை சிறப்பாக நடத்தி, சாதகமாக உத்தரவு பெற முடியும் என்றும், எங்களது வழக்கு மற்றும் சொத்து ஆவணங்களை படித்து விட்டு உச்சநீதிமன்றத்தில் ‘சூ மோட்டோ’ வழக்காக எடுத்து எங்களுக்கு பாத்தியப்பட்ட அனைத்து சொத்துக்களையும் வில்லங்கம் விவகாரம் இல்லாமலேயே சிறப்பு உத்தரவாக பெற்று தருகிறேன் என்றும், 20 வருட வழக்கு போராட்டம் காரணமாக ஒரு பெரிய தொகையை இழப்பீடாக உறுதியாக பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பி ஆனந்த் வைஷ்ணவ் கேட்டபடி, அவருக்கு பல தவணைகளாக ரூ.27 லட்சத்து 93 ஆயிரத்து 344 அனுப்பி வைத்தோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதுகுறித்து ஆனந்த் வைஷ்ணவிடம் கேட்டபோது, அவர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, எங்களை ஏமாற்றி ரூ.27.93 லட்சம் பறித்த ஆனந்த் வைஷ்ணவ் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணம், அசல் காசோலைகள், உயில், 5 செல்போன்கள், பாஸ்போர்ட்டுகளை பெற்று தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இளங்கோவிடம் மோசடி செய்த ஆனந்த் வைஷ்ணவ், எம்எஸ்சி முதுகலை பட்டம் படித்து விட்டு ஐடி கம்பெனிகளில் பணியாற்றியவர் என்பதும், எவ்வித அரசு பணிகளில் பணியாற்றாதவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.