*டிரைவர் உள்பட 3 பேர் கைது
கோவை : கோவாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 1,755 லிட்டர் போலி மதுபானங்களை மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்து டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அமலாக்க பிரிவு புலனாய்வுத் துறை சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போலி மதுபானம் தயாரிப்பு கூடங்கள், சட்ட விரோதமாக மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள், போலி மதுபான வர்த்தகம் பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. அமலாக்க பிரிவு புலனாய்வுத் துறை, சமீபத்தில் சென்னையில் 2 போலி மதுபான ஆலைகள் கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 6-ம் தேதி கோவை சிஐயூ ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு திருப்பூர் மாவட்டம் செடப்பாளையம் சந்திப்பிற்கு அருகில், பல்லடம் மங்கலம் சாலையில் ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர். அப்போது அதில் போலி மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் வழியாக கோவைக்கு கொண்டு வரப்பட்ட போலி மதுபான சரக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு மத்திய நுண்ணறிவு பிரிவினர் வெளிமாநிலங்களில் இருந்து செயல்படும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதன் அடிப்படையில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகத்திற்கு இடமான ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது, அதில் 2,340 போலி (1,755 லிட்டர்) கோவா மதுபான குடுவைகளை இருந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், போலி கோவா மதுபான குடுவைகளை கடத்தி கொண்டு வந்த வாகனத்திற்கு உதவிய ஒரு காரையும் கைப்பற்றினர். விசாரணையில், இந்த போலி மதுபானங்கள் கோவா மாநிலத்திலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த கடத்தலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், போலி மதுபானத்தை கடத்த உதவிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கூடுதலாக, மற்றொரு வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சட்டவிரோத மதுபான வர்த்தகங்களை தடுக்கும் நோக்கில், துறை தொடர்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் சட்டவிரோத மதுபான வர்த்தக தொடர்பான தகவல்களை இலவச தொலைபேசி எண் 10581 அல்லது 9498410581 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதில், வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.