Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற ெகாடூர தந்தை

மாதவரம்: வியாசர்பாடி சுந்தரம் 4வது தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் (38), கூலி ெதாழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு 4 வயது மற்றும் இரண்டரை வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 3வதாக கர்ப்பமான விஜயலட்சுமி பிரசவத்திற்காக கடந்த 29ம் தேதி ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 4ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விஜயலட்சுமி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி குழந்தையை ராஜ்குமார் மற்றும் விஜயலட்சுமி இருவரும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வயிற்றில் பலத்த காயத்துடன் குழந்தை அங்கு அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி வடக்கு மண்டல மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று குழந்தையின் காயத்தை பார்த்தனர். 3 இடத்தில் குழந்தைக்கு வயிற்றில் தையல்கள் போடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை இறப்பில் சந்தேகம் இருந்ததால் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் கூர்மையான ஆயுதம் வைத்து குழந்தையை வயிற்றில் குத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன என அறிக்கை வந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் விஜயலட்சுமி தனது கணவரின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையின் தந்தை ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது, ராஜ்குமார் தனது குழந்தையை குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று ராஜ்குமாரின் மனைவி விஜயலட்சுமி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழுதபோது ராஜ்குமார் பிஞ்சு குழந்தையென்றும் பாராமல் கத்திரிக்கோலால் வயிற்றில் குத்திவிட்டு குழந்தையின் மேல் துணியை போர்த்திவிட்டு கத்திரிக்கோலை ஒளித்து வைத்துவிட்டார். விஜயலட்சுமி குளித்துவிட்டு வெளியே வந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை பார்த்தபோது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் குடல் சரிந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு கூச்சலிட்டு கணவர் ராஜ்குமாரை அழைத்து காண்பித்துள்ளார்.

அதற்கு ராஜ்குமார் ஒன்றுமே தெரியாததுபோல், பிறக்கும்போதே குழந்தைக்கு குடல் சரியில்லை என மருத்துவர்கள் கூறினார்கள் என பொய் சொல்லி விஜயலட்சுமியை நம்ப வைத்துள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு இருவரும் குழந்தையை அழைத்து வந்துள்ளனர். பிரத பரிசோதனை முடிவில்தான் கூர்மையான ஆயுதத்தால் ராஜ்குமார் குழந்தையை கொலை செய்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை காப்பாற்ற முடியாது என்று எண்ணிய ராஜ்குமார், இந்த கொடூர செயலைச் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜ்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.