Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் அதிமுக நிர்வாகி புதுச்சேரியில் படுகொலை: பழிக்குப்பழியா? என போலீஸ் விசாரணை

பாகூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (48). கடலூர் 25வது வார்டு அதிமுக அவைத் தலைவர். பெயின்டிங் வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி பாகூர் அருகே திருப்பனாம்பாக்கம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கரகாட்ட நிகழ்ச்சியை பார்க்க சென்றார். நேற்று காலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, நண்பரான கூத்து கலைஞர் ரங்காவுடன் (57) பைக்கில் கடலூர் திரும்பி கொண்டிருந்தார். பாகூர் அருகே இருளன்சந்தை வாட்டர் டேங்க் அருகே பின்னால் காரில் வந்த கும்பல், பைக்கின் மீது வேகமாக மோதி அவர்களை கிழே தள்ளியது.

உடனே காரில் இருந்த இறங்கிய மர்ம கும்பல், பத்மநாபனை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் அவரது முகம், மார்பு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. விரல்கள் துண்டாகி விழுந்தன. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவருடன் வந்த ரங்கா தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு கடலூரில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில், நடனம் ஆடியது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாஸ்கரை, பத்மநாபன் தரப்பினர் கண்டித்துள்ளனர்.

இதனால், அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் பாஸ்கர் உயிரிழந்தார். திருப்பாதிரிபுலியூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து, பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பத்மநாபன், நேற்று காலை மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் பத்மநாபன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.