சென்னை எம்ஆர்சி. நகரில் உள்ள ஓட்டலில் காதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு ஓஜி கஞ்சா விருந்து: புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் அதிரடி கைது
சென்னை: காதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டலில் மது மற்றும் ஓஜி கஞ்சா விருந்து வைத்த தொழிலதிபரான புதுமாப்பிள்ளை உள்பட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 கிராம் உயர் ரக ஓஜி கஞ்சா, 11 செல்போனகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் எல்லையில் உள்ள எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(27). இவர் இளம் பெண் ஒருவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவரது காதலுக்கு பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தோஷ் தனது நண்பர்கள் துணையுடன் கடந்த வாரம் இளம் பெண்ணை திருமணம் செய்தாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் காத்திருந்து காதல் திருமணம் செய்ததால் சந்தேஷ் திருமணத்திற்கு உதவிய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நடத்தினார். அப்போது சந்தோஷ் தனது நண்பர்களுக்கு மட்டும் மதுபானங்கள் மற்றும் உயர் ரக ஓஜி கஞ்சா பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் நண்பர்களுக்கு இளம் பெண்களையும் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
ஓஜி வகை கஞ்சா பார்ட்டியில் பயன்படுத்துவது குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தெரியவந்தது. பொதுவாக ஓட்டல்களில் இரவு நேர பார்ட்டிகளில் தடை செய்யப்பட்ட ஓஜி கஞ்சா, மெத்தப்பெட்டமைன், கொக்கைன் உள்ளிட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று போதை பொருள் தடுப்பு பிரிவு கடுமையான உத்தரவு போட்டுள்ளது. இதனால், அச்சமடைந்த ஓட்டல் நிர்வாகம் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த பார்ட்டில் ஓஜி வகை கஞ்சா பயன்படுத்துவது குறித்து ரகசியமாக பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். அதில், காதல் திருமணம் செய்த சந்தோஷ் தனது நண்பர்களுக்கு கஞ்சா மற்றும் ஓஜி வகை கஞ்சா பார்ட்டியில் வழங்கியது உறுதியானது.
தொடர்ந்து, சந்தோஷிடம் போலீசார் விசாரித்தனர். அதில், நண்பர்களுக்கு பெரிய அளவில் விருந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் சினிமா துறையில் பணியாற்றும் தனது நண்பரான சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர்(37) என்பவரிடம் கூறியுள்ளார். அதற்கு ஜெகதீஸ்வர் பார்ட்டிக்கு தேவையான போதை பொருள் சப்ளை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி பார்ட்டிக்கு தேவையான கஞ்சா மற்றும் ஓஜி வகை கஞ்சாவை ஜெகதீஸ்வரன் வாங்கி வந்து சந்தோஷிடம் கொடுத்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து, போலீசார் கொளத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சந்தோஷ் மற்றும் கஞ்சா வாங்கி கொடுத்த சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர்(34) மற்றும் அவர்களின் நண்பர்களான அம்பத்தூரைச் சேர்ந்த தீபக்(27), புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த அக்ஷைராஜீ(21), திருவள்ளூரை சேர்ந்த ரோகித்(21), கிருஷ்ணபரிக்(20), மனிஷ்(22), சரத்குமார்(32), பூந்தமல்லியை சேர்ந்த மதன்குமார்(29), திருவள்ளூரை சேர்ந்த ஜிலான்(28), அம்பத்தூரை சேர்ந்த காமேஷ்(25), ஆகிய 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 மில்லி கிராம் ஓஜி கஞ்சா மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.