டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அவையாம்பாள்புரத்தை சேர்ந்த குமார் மனைவி நிவேதா(28). தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் கடந்த 11ம் தேதி மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். 24 மாதம் தவணை செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து முன்பணமாக 6,900 ரூபாய் செலுத்தி டூவீலரை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே குமார் டூவீலர் வாங்கி பணம் செலுத்தாதது தெரியவந்ததால் வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி முருகமங்கலத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(38) கூறியுள்ளார். ஆனால், டூவீலரை குமார் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆனந்ததாண்டவபுரம் அருகே நிவேதா இருசக்கர வாகனத்தில் சென்றபோது சவுந்தரராஜன் வழிமறித்து தாக்கி, நிவேதாவின் ஆடையை பிடித்து இழுத்ததில் உடை கிழிந்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அறுந்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் சவுந்தராஜன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.