Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவுடர் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: 1 மணி நேர தாமதத்துக்கு பின்னர் விமானங்கள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் உள்நாட்டு விமானத்தில், பவுடர் வடிவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை தீவிரவாத இயக்கம் ஒன்று, செயல்படுத்த உள்ளதாகவும் கொல்கத்தா விமான நிலைய இணையதள முகவரிக்கு, நேற்று ஒரு மர்ம இ-மெயில் வந்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் உடனடியாக உயர்நிலை அதிகாரிகளின் அவசர ஆலோசனை பாதுகாப்பு கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமானங்கள் பாதுகாப்பான பிரிவான பிசிஏஎஸ் அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னையில் இருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்கள், குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களை தீவிரமாக சோதனை நடத்துவதோடு, அந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை, வழக்கமான சோதனைகளோடு, கூடுதலாக ஒரு சோதனையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் பயணிகள் தங்கள் உடமைகளில் பவுடர் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அதோடு வழக்கம்போல், விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி, மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது, விமான நிலைய வளாகத்திற்குள் நீண்ட நேரமாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை கண்காணித்து சோதிப்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் தீவிரபடுத்தப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன், சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. எனவே இது வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த சோதனைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, சீரடி உள்ளிட்ட பல விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன.