Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை அடித்த பாஜவினர்: தகாத வார்த்தையில் பேசிய வீடியோ வைரல்

திருப்பூர்: ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த பாஜ நிர்வாகிகள் பெண்ணை திட்டி தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். வேட்பாளருக்கு ஆதரவாக பாஜவினர் சிலர் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா (37) என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார்.

அவரிடம் பாஜவினர் வாக்கு சேகரிக்க வந்தனர். அப்போது, நாப்கின், அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்தது குறித்து சங்கீதா கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜவினர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சங்கீதா கடைக்குள் வந்து விட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் 10க்கும் மேற்பட்ட பாஜவினர் சங்கீதாவின் கடைக்கு வந்தனர்.

அவர்கள், ‘‘நீ யார் எங்களிடம் கேள்வி கேட்க?’’ எனக்கேட்டு தகாத வார்த்தையில் பேசி சங்கீதாவை சரமாரியாக தாக்கினர். அப்போது ‘‘நான் கேள்விதானே கேட்கிறேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் தாக்குவீர்களா?’’ என கேட்டார். ஆனால் பாஜவினர் சங்கீதாவை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சங்கீதா 15 வேலம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பாஜ மாவட்ட செயற்குழு உறுப்பினரான சின்னசாமி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் அண்ணாமலை பிரசாரத்தின்போது அவரிடம் கேள்வி எழுப்பிய கைத்தறியாளரை பாஜவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்டதால் பெண்ணை பாஜவினர் தாக்கி, தகாத வார்த்தையால் பேசியிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, அதிமுக கண்டனம்: ஜிஎஸ்டி தொடர்பாக கேள்வி கேட்ட பெண்ணை பாஜவினர் தாக்கினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ‘கடும் நடவடிக்கை வேண்டும்’

பாஜவினர் தாக்குதல் குறித்து சங்கீதா கூறியதாவது: எங்களது பகுதியில் பாஜவினர் பிரசாரத்திற்கு வந்தனர். அப்போது பெண்களுக்கான பாதுகாப்பை பாஜ ஆட்சியில்தான் வழங்கி உள்ளோம் என தெரிவித்தனர். அப்போது நான் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் அதற்கு கூட அதிக அளவு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கும் அதிக அளவு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தேன். எனது அருகில் இருந்தவர்கள் அரிசி விலை உயர்வு உள்ளிட்ட விலை உயர்த்தப்பட்ட பொருட்கள் குறித்து தெரிவித்தனர்.

அங்கேயே சிலர் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். நான் கடைக்கு வந்துவிட்டேன். கடைக்குள் புகுந்த 10 பேர் என்னை தாக்கினர். எனது செல்போனையும் பிடுங்கி வீசினர். சின்னச்சாமி என்பவர் என்னை தாக்கினார். மிகவும் மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார். பெண்கள் பாதுகாப்பு குறித்து இவர்கள் பேசுகிறார்கள். கேள்வி கேட்ட என்னை கடுமையாக தாக்குகிறார்கள். எனவே எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்னை தாக்கிய பாஜ நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.