Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட் வீரர் போல பேசி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபர்: மாடலிங் அழகிகள் படத்தை வைத்து டேட்டிங் வருவதாக பெண் குரலில் பேசி பணம் பறித்ததும் அம்பலம்

சென்னை: இன்ஸ்டா பக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் போல் பேசி பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் இதுபோல் இன்ஸ்டா பக்கத்தில் மாடலிங் அழகிகள் படத்தை வைத்து வாலிபர்களிடம் பெண் குரலில் பேசி டேட்டிங் வருவதாக பணம் பறித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் கீதா (38). கடந்த ஜூன் மாதம் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் என்பவர் கணக்கில் இருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் என்பதால் கீதா அவரது நட்பை ஏற்றுக்கொண்டார். பிறகு பாபா இந்திரஜித் இன்ஸ்டா மெசேஞ்சரில் இருந்து மெசேஜ் வந்தது. அதை தொடர்ந்து இருவரும் மெசேஞ்சரில் ஒருவரை ஒருவர் பேசி வந்துள்ளனர். பிறகு கீதாவிடம் எனக்கு அரசு அதிகாரிகள் பலர் தெரியும். நான் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி ஜிபே மூலம் 50 முறை 5 லட்சத்து 8 ஆயிரத்து 700 ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், சென்னபடி அவர் எந்த வேலையும் அவருக்கு வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கீதா எதிர் முனையில் பேசிய நபரிடம் பணத்தை கேட்ட போது, அவர் இன்ஸ்டாகிராம் ஐடியை நீக்கிவிட்டார்.

மேலும் சந்தேகமடைந்த கீதா, சென்னை பெருநகர மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார், மோசடி செய்த நபரின் இன்ஸ்டா ஐடியை பெற்று விசாரணை நடத்திய போது, ராகுல் என்பவர் பெயரில் இன்ஸ்டா ஐடி உருவாக்கப்பட்டு, முகப்பு பக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் படத்தை வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சென்னை ஒட்டியம்பாக்கம் காரணை பிரதான சாலையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராகுல் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்த ராகுலை கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து நீக்கியதால், வீட்டில் உள்ள தாய் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் கொடுக்க வேண்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இளம்பெண் ஒருவருடன் ராகுலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது. அதற்கு பணம் தேவைப்பட்டதால் பிரபலங்கள் பெயரில் இன்ஸ்டா பக்கம் தொடங்கி அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், ராகுலின் நடவடிக்கை பிடிக்காததால் திருமணம் நடந்த ஒரு மாதத்தில் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு ராகுல், மாடலிங் அழகிகள் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வைத்து வாலிபர்களுக்கு நட்பு கோரிக்கை வைத்து, அதன் மூலம் மாடலிங் பெண்கள் போல் குரல் மாற்றி பேசி அவர்களுடன் டேட்டிங் வருவதாக கூறி பல லட்சம் பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுபோல் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெண் தோழி ஒருவரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.அதைதொடர்ந்து ராகுலை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.