Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிரிக்கெட் மட்டையை திருடிய போது பார்த்ததால் 10 வயது சிறுமியை 20 முறை குத்தி கொன்ற 14 வயது சிறுவன்: ஐதராபாத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் பயங்கரம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட் திருட முயன்றதை நேரில் பார்த்த 10 வயது சிறுமியை, 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குக்கட்பல்லி பகுதியில் கடந்த 18ம் தேதி, 10 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், போலீசாருக்கு ஆரம்பத்தில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. சந்தேகத்திற்குரிய வகையில் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை. ஐந்தாவது நாளாகத் தொடர்ந்த தீவிர விசாரணையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபரான 14 வயது சிறுவனைப் பிடித்து விசாரித்தனர். 10ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், சிறுமியை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து சைபராபாத் காவல்துறை ஆணையர் அவினாஷ் மொஹந்தி கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர். அவர், மொட்டை மாடி வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்து, சிறுமியின் தம்பிக்குச் சொந்தமான கிரிக்கெட் பேட்டைத் திருடுவதற்காக அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது சிறுமி அவனைப் பார்த்து கூச்சலிட்டதால், அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமியை 20 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சிறுமி கொலையானார். பின்னர், கத்தியையும் தனது கைகளையும் கழுவி, உடைகளை மாற்றிக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி சாதாரணமாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

அவரிடமிருந்து, குற்றத்தைச் செய்யத் திட்டமிட்டுக் கையால் எழுதிய குறிப்பு, திருடப்பட்ட கிரிக்கெட் பேட் மற்றும் குற்றத்தின்போது அணிந்திருந்த உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார். ஆனால், போலீசாரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த சிறுமியின் பெற்றோர், வழக்கை நீர்த்துப் போகச் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் உறவினர்களுடன் குக்கட்பல்லி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘குற்றவாளி சிறுவன் என்று கூறி கடுமையான தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்ற காவல்துறை முயற்சிக்கிறது. கிரிக்கெட் பேட் திருட வந்தபோதுதான் கொலை செய்தான் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை’ என்று அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.