போபால்: இயந்திரக் கோளாறால் அந்தரத்தில் தொங்கிய ஆத்திரத்தில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிரேன் ஓட்டுநரை பொதுவெளியில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா, மத்தியப் பிரதேசம் மாநிலம், சத்னாவில் உள்ள செமரியா சவுக் பகுதியில் நடந்தது. சத்னா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங் கலந்துகொண்டார். அப்போது, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக, நகராட்சிக்குச் சொந்தமான ஹைட்ராலிக் கிரேன் ஒன்றில் எம்பி ஏறி மேலே சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் பழுதாகி, பாதியிலேயே அந்தரத்தில் நின்றது. பின்னர், மீண்டும் கிரேன் இயக்கப்பட்டபோது குலுங்கியுள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த எம்.பி. கணேஷ் சிங், கிரேன் மீண்டும் கீழே இறங்கியதும் கோபத்துடன் காணப்பட்டார். கிரேனை இயக்கிய கணேஷ் குஷ்வாஹா என்ற நகராட்சி ஊழியரைத் தன் அருகே அழைத்த எம்.பி கணேஷ் சிங், அவரது கையைப் பிடித்து இழுத்து, அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் காணொலியாகப் பதிவு செய்தனர்.
இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி-யின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், ‘இது பாஜக தலைவர்களின் அதிகார போதை மற்றும் மன்னராட்சி மனப்பான்மையைக் காட்டுகிறது’ என்று விமர்சித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கிரேன் ஓட்டுநர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
