சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து வருடந்தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தகம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்தது. அதனடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள், சிவகாசியில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று அதிகாலை 1 மணி வரை நீடித்தது, தொடர்ந்து 9 மணி நேர இடைவேளைக்கு பின்பு நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை காரணமாக பிரபல பட்டாசு ஆலைகளின் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருப்பதால் ஆர்டர் கொடுக்க வரும் வெளிமாநில வியாபாரிகள் ஆங்காங்கே விடுதிகளில் தங்கி உள்ளனர்.