Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழர் என்பதற்காக ஆதரிக்க வேண்டுமென அ.தி.மு.க. கோரிக்கை; இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆந்திர மாநில கட்சிகள் ஆதரிப்பார்களா?: செல்வபெருந்தகை கேள்வி

சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா..? என அதிமுக,பாஜகவுக்கு செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே நடைபெறுகிற தேர்தல் மட்டுமல்ல, இதுவொரு சித்தாந்த போர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

இந்த சித்தாந்த போரை தனிநபர்களை வைத்து முடிவு செய்துவிட முடியாது. இந்த தேர்தலில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு தென் மாநில மக்களின் உரிமைகளை பறிப்பதோடு, நிதிப் பகிர்வில் அப்பட்டமான பாரபட்ச போக்கை பிரதமர் மோடி அரசு கையாண்டு வருவதை அனைவரும் அறிவார்கள். இதற்கு காரணம் தென் மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலை உள்ளது. இதனால், தென் மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி கபளீகரம் செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழர் என்பதற்காக ஆதரிக்க வேண்டுமென அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதே கோரிக்கை ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெலுங்கர் என்பதற்காக ஆதரிப்பார்களா?  இத்தகைய வாதம் எந்த வகையிலும் பொருளற்றதாகும்.

எந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுகிறாரோ, எந்த கொள்கைகளை முன்னிலைப்படுத்துகிறாரோ, அதை வைத்து தான் ஒரு வேட்பாளரை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழக நலன்களுக்கு விரோதமாக தமிழர் உரிமைகளை பறிக்கிற, நீட் தேர்வை திணிக்கிற, மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தியை புகுத்துகிற, நிதி பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கிற தமிழர்கள் விரோத கட்சியான பா.ஜ.க.வின் வேட்பாளர் என்பதை எவரும் மறந்திட இயலாது.

எனவே, இந்தியாவின் நலன்களுக்காக அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து பாதுகாப்பதற்கான முழு தகுதியுடைய நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பதால் அவரை ஆதரிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது, இந்தியாவிற்கு நல்லது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.