மாடுகளுக்கு இனப்பெருக்க காலம் என்பது மிகவும் முக்கியமான காலம். இந்தக் காலத்தில் சில வழிமுறைகளை நாம் கையாள்வது அவசியம்.
சினை மாடுகள் பராமரிப்பு
சினையுற்றிருக்கும் மாடுகளுக்கு அவற்றினுள் வேகமாக வளரும் கருவிற்காகவும், பிற்கால பால் உற்பத்திக்குத் தேவைக்கான சக்தியைச் சேமித்து வைப்பதற்காகவும் அதிகப்படியான தீவனம் அளிக்கப்படவேண்டும். சினையுற்றிருக்கும் மாடுகளை அவற்றின் கடைசி சினைக்காலத்தின்போது மற்ற மாடுகளிலிடமிருந்து தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும்.கன்று ஈனும் கொட்டகையில் சினையுற்ற மாடுகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும்.கொட்டகையில் போதுமான அளவு வைக்கோல் பரப்பி மாடுகள் படுப்பதற்கு வசதி செய்யவேண்டும். கொட்டகைத் தரை வழுக்காமல் இருக்க வேண்டும்.மாடுகளின் கடைசி சினைக்காலத்தில் அவற்றுக்கு மலமிலக்கும் தன்மை வாய்ந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.
மாடுகளில் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
மாட்டுப்பண்ணையில் மாடுகளின் இனப்பெருக்கத்திறனை அதிகரிப்பதற்கு பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் நாள், காளையுடன் இனப்பெருக்கத்திற்காக சேர்த்த நாள் மற்றும் கன்று ஈன்ற நாள் போன்ற விவரங்களை பதிவேட்டில் எழுதி வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்களைக் கொண்டு மாடுகள் சினைப்பருவத்திற்கு வரும் உத்தேச நாளைக் கணக்கிட்டு மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.பெரிய மாட்டுப் பண்ணைகளில் சினைப்பருவத்தைக் கண்டறியும் காளைகளைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாட்டினுடைய முழுமையான இனப்பெருக்க வரலாறு, முந்தைய இனப்பெருக்கத்திறன், இனப்பெருக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவற்றை முறையாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாடுகளின் ஒழுங்கற்ற சினைப்பருவம், அவற்றின் பிறப்புறுப்பில் இருந்து வெளிவரும் திரவ ஒழுக்கின் நிற மாறுபாடு போன்றவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். நஞ்சுக்கொடி போடாத மாடுகளுக்கு முறையான சிகிச்சை அளித்து, அடுத்த முறை அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கு முன்பு அவற்றின் இனப்பெருக்க உறுப்பை பரிசோதித்து ஏதேனும் கோளாறுகள் இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்.
பண்ணை மேலாளர் மாடுகளுக்கு சினை ஊசி போட்ட 24-36 மணி நேரத்திற்குப் பிறகு அவற்றின் இனப்பெருக்க உறுப்பில் இருந்து சினைப்பருவ காலத்தின் மத்திய பகுதியில் ஏற்படும் இரத்த ஒழுக்கு இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு இரத்த ஒழுக்கு சினை ஊசி போட்ட 24 மணி நேரம் கழித்துத் தென்பட்டால் மாடுகள் மிகவும் தாமதமாக கரூவூட்டல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
கருவூட்டல் செய்யப்பட்டு 36 மணி நேரம் கழித்து இரத்த ஒழுக்கு காணப்பட்டால் மாடுகள் மிகவும் முன்பாகவே கருவூட்டல் செய்யப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். இதனை வைத்து மாடுகள் கருவுறாததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கருவூட்டல் செய்து 45-60 நாட்கள் கழித்து மாடுகளுக்கு சினைப்பரிசோதனை செய்யவேண்டும். அவை சினையாக இல்லையெனில், மீண்டும் அவற்றை இனப்பெருக்கம் செய்வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.காளைகள் மூலம் இனவிருத்தி செய்வதை விட செயற்கைமுறை கருவூட்டல் மூலம் மாடுகள் கருவுறும் விகிதம் குறைந்தால், செயற்கைமுறை கருவூட்டல் செய்த நேரம், செய்த முறை, விந்தின் தன்மை போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும். மாடுகளுக்கு முறையான உடல்நல பராமரிப்பு, நோய்ப்பரிசோதனை மற்றும் நோய்களுக்கெதிரான தடுப்பூசி அளித்தல் மிகவும் அவசியமாகும்.
சில மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகள் நன்றாக வெளிப்படுத்தப்படாமலும், அறிகுறிகளே வெளியில் தெரியாமலும் இருக்கும். ஊமை சினைப் பருவ அறிகுறிகள் எருமைகளில் பொதுவாகக் காணப்படும். ஆனால் சினை முட்டை வெளியேறுவது எப்போதும் போலவே இருப்பதால் இந்த எருமைகளை கருவூட்டல் செய்யும்போது அவற்றுக்கு சினை பிடிக்கும்.சினைப்பருவத்திற்கு வராமல் இருப்பது கருமுட்டைப்பை முதிர்ச்சி அடையாமல் இருப்பதாலோ அல்லது கார்பஸ் லுயூட்டியம் எனும் பகுதி கருமுட்டையில் நிலையாக இருப்பதாலோ ஏற்படுகிறது. முந்தைய நிலையில் கருமுட்டைகள் உருவாவதில்லை. எனவே கிடேரிகள் சினைப்பருவத்திற்கு வருவதில்லை.
கருமுட்டைப்பைகள் முதிர்ச்சி அடையாததற்கான முக்கிய காரணம் சத்துக்குறைபாடாகும். இது தவிர மரபியல் காரணங்களும் கருமுட்டைப்பைகள் முதிர்ச்சி அடையாததற்கு காரணமாகின்றன.
கார்பஸ் லுயூட்டியம் எனப்படும் பகுதி கருமுட்டையில் நிலையாக இருப்பதற்கு பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளும் சரிவிகிதமற்ற தன்மையும் காரணமாக இருக்கிறது. இவ்வாறு நிலையாக இருக்கும் கார்பஸ்லுயூட்டியத்தால் மாடுகள் சினைப்பருவத்திற்கு வருவது தடுக்கப்படுகிறது. இதற்கான பொதுவான காரணம் நஞ்சுகொடி தங்குதலும், கருப்பையில் நோய்த் தொற்றுகளுமாகும். கன்று ஈன்ற பிறகு சிறிது காலத்திற்கு மாடுகள் பால் கொடுப்பதால், சினைப் பருவத்திற்கு வருவதில்லை.
கன்று ஈனுவதற்கான அறிகுறிகள்
கன்று ஈனும் மாடுகள் மற்ற மாடுகளில் இருந்து தனியே பிரிந்து காணப்படும்.தீவனம் எடுக்காமல் அயற்சியுடன் காணப்படுதல்.மடி மற்றும் மடிக்காம்புகள் வீங்கி, காம்புகளில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிதல்.மாடுகளின் இடுப்பின் தசை நார்கள் கன்று ஈனுவதற்கு ஒருநாள் முன்பாகத் தளர்ந்து காணப்படுதல். வாலின் அடிப்பகுதியில் தசை நார்கள் வலுவிழந்து தளர்ந்து காணப்படுவதால் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோன்றுதல். இனப்பெருக்க உறுப்பு வீங்கி தொளதொளவென்று காணப்படுதல்.
மாடுகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டு பின்புறம் நோக்கி உதைத்துக்கொண்டு இருத்தல்.