தென்காசி: குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ம் நாளான நேற்று ஐந்தருவி வெண்ணமடை படகு குழாமில் ஆண்கள், பெண்களுக்கான படகு போட்டிகள் நடந்தது. குற்றால சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழா கடந்த 20ம்தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. நேற்று ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு போட்டிகள் நடந்தது. போட்டிகள் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டன. ஆண்களும், பெண்களும் உற்சாகமாக பங்கேற்றனர். போட்டியை மாவட்ட சுற்றுலாத் துறை உதவி அலுவலர் சந்திரகுமார், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த போட்டிகளில் பெண்கள், ஆண்களுக்கு இரு நபர் கொண்ட ஆறு படகுகளில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் போட்டியில் சென்னையை சேர்ந்த சந்தியா, லெட்சுமி குழுவினர் முதலிடத்தையும், குற்றாலம் ஐந்தருவி பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள், அகல்யா குழுவினர் இரண்டாமிடத்தையும், மேலமெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த புனிதா, கீர்த்திகா குழுவினர் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து ஆண்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் குற்றாலத்தைச் சேர்ந்த வசந்த், கணேசன் குழுவினர் முதலிடத்தையும், காடை என்ற அருண்ராஜ், பிரசாத் குழுவினர் இரண்டாமிடத்தையும், மதுரையைச் சேர்ந்த கண்ணன், கரிலிக்காஷ் குழுவினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பழனி நாடார் எம்எல்ஏ பரிசுகளை வழங்கி பாராட்டினார். வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகரத் தலைவர் துரை மற்றும் படகு குழாம் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.