Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றாலம் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு மலைப்பகுதியில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்

*ஆர்டிஓ பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தென்காசி : குற்றாலம் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு மலைப்பகுதியில் கைக்குழந்தைகளுடன் 200க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி, செங்கோட்டை, காசிமேஜர்புரம், மூலக்கரையூர், வல்லம், இலஞ்சி, மேலகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வீடு இல்லாத பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் வீட்டுமனை பட்டா வழங்க போதுமான இடம் இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இலஞ்சியில் இருந்து ஐந்தருவி செல்லும் குருளிமேடு கிழவநத்தம் பாறை சாலை பகுதியில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குருளிமேடு, கிழவநத்தம் பாறை பகுதியில் நேற்று காலையிலேயே கைக்குழந்தைகளுடன், 200க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய ஐக்கிய கம்யூஸ்ட் கட்சியின் செங்கோட்டை தாலுகா செயலாளர் அருள்ராஜ் தலைமை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் ஆறுமுகம், தலைவர் மாடசாமி, தங்கம், சாந்தி, மாரியம்மாள் முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் காளியப்பன், தாலுகா செயலாளர் கணேசன், வட்டார செயலாளர் சம்சுதீன், ஒன்றிய செயலாளர் கதிரேசன், முருகேசன், அய்யனார், குத்தாலிங்கம், கனகராஜ், வைரமுத்து, மாடசாமி, பேச்சிமுத்து, பூங்கொடி ஆகியோர் பேசினர்.

இதனைத் தொடர்ந்து மதியம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தென்காசி ஆர்டிஓ லாவண்யா, தாசில்தார் மணிகண்டன், மண்டல துணை தாசில்தார்,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் மற்றும் குற்றாலம் போலீசார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டாட்சியர் லாவண்யா இந்த பகுதி முழுவதும் பாறை புறம்போக்காக உள்ளது. இதற்கு பாதை வசதி இல்லை. எனவே மாற்று இடம் ஏற்பாடு செய்து வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேறு எங்குமே இடமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே இந்த இடம் தான் இருக்கிறது. இங்கு நாங்களே பாதை வாங்கி தருகிறோம். நீங்கள் பட்டா கொடுங்கள் என்று கேட்டனர். இதற்கு கோட்டாட்சியர் லாவண்யா பரிசீலனை செய்வதாக தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் குற்றாலம் அருகே வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மலைப் பகுதியில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.