ஒருவரின் தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகள் யாராலும் எந்த நிலையிலும் மீறப்படக் கூடாது : ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை : தமிழ்நாடு முழுவதும் அடிப்படை தேவைகள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. பட்டியலின மக்கள் குறித்து தவறாக பேசியவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "தமிழ்நாடு முழுவதும் அடிப்படை தேவைகள் ஜாதிய பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஒருவரின் தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமைகள் யாராலும் எந்த நிலையிலும் மீறப்படக் கூடாது. தலைவன்கோட்டை கிராமத்தை முன்மாதிரியாக வைத்து உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து ஆக.21ல்அறிக்கை அளிக்க ஆணையிடுகிறோம், "இவ்வாறு தெரிவித்தனர்.