Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு நிலத்தை தனி நபர்களின் தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் : ஐகோர்ட்

சென்னை : கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிலத்தில், மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி பூங்கா மற்றும் மழை நீரை சேமிக்க 4 குளங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, மக்களின் நலன் கருதி, கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, கிண்டி ரேஸ் கிளப்புக்கு சொந்தமான இடத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களையும், உடைமை சேதங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்கும் போது இது போன்ற திட்டங்கள் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சம நிலை ஏற்படுவதோடு, காற்று மாசுவை குறைக்க இயலும் எனவும் காற்று மாசு என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை மட்டுல்ல எனவும் பொதுமக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்சினை எனவும் உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும் எனவும் தெரிவித்தனர்.