தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிக்கப்பட்டிருந்த தம்பதி உட்பட மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக் கொலை: ஆந்திராவில் அதிகாலை பரபரப்பு
திருமலை: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டம் மாரேடுமில்லியில் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நேற்று காலை விரைந்த போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் அதிரடியாக பதில் தாக்குதல் நடத்தினர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் உயர்மட்ட தலைவர் ஹிட்மா(53) மற்றும் அவரது மனைவி உட்பட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹிட்மாவுக்கு ரூ.1 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.50 லட்சமும் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் நடத்திய சோதனையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி 2, பிஸ்டல் 1, ரிவால்வர்-1, மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள்-150 மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* 31 மாவோயிஸ்டுகள் கைது
ஆந்திராவில் என்கவுண்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் முக்கிய நகரங்களில் பல மாவோயிஸ்ட் இயக்கத்தினர் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து விஜயவாடாவில் பெனமலூரில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கூலி தொழிலாளர்கள் எனக்கூறி தங்கியிருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 31 பேரை நேற்று ஆக்டோபஸ் சிறப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்டோ நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏகே 47 துப்பாக்கிகள், ஏராளமான டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


