செங்கோட்டை: தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே சீவநல்லூரில் அம்மையார் ஊற்று பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதற்காக அப்பகுதி மக்கள் சென்றனர். அப்போது, வழியில் தென்னை மரத்தில் இருந்த கடந்தை வண்டு கூடு காற்றில் திடீரென கலைந்து அதிலிருந்து புற்றீசல்போல கிளம்பிய வண்டுகள் அன்னதானம் சாப்பிட சென்றவர்களை கடித்தன.
இதில், லட்சுமணன் (85), அவரது மனைவி மகராசி (82) மற்றும் சிவலிங்கம் மனைவி சாந்தி (65), மாரிச்செல்வம் மனைவி சண்முகபாரதி (29) மற்றும் ஆறுமுகம் (75) ஆகியோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமணன், அவரது மனைவி மகராசி ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.