புதுடெல்லி: நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீர் பால் திவாசையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போதுபேசிய பிரதமர் மோடி, முகாலயப்பேரரசின் அடக்கு முறைக்கு அடிபணிவதை விட அசைக்க முடியாத தைரியத்தையும், நம்பிக்கையையும் தேர்ந்தெடுத்த குரு கோவிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதாக்களின் ஈடு இணையில்லாத தியாகம் நினைவுக்கூரத்தக்கது. 300 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 26ம் தேதி சாஹிப் ஜாதாக்கள் இளம் வயதினராக இருந்தாலும், துணிச்சலை வெளிப்படுத்தி உயிர் தியாகம் செய்தனர். ஆதாயம் தரும் வகையில் தீயவற்றை செய்யத்தூண்டினாலும் அவற்றை நிராகரித்து கற்பனை செய்து பார்க்க முடியாத சித்ரவதைகளை எதிர்கொண்டனர்.
நாட்டிற்கான நோக்கத்தை தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று அவர்கள் நினைத்தனர். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வீரச்செயலாகும். இந்த சகாப்தம் இயந்திரங்களை தாண்டி இயந்திர கற்றல் என்பதை நோக்கி நகர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மைய நிலையில் உள்ளது. அதன் பயன்பாடானது வழக்கமான மென்பொருளை மாற்றுவதை காணலாம். இந்த சவால்களை சமாளிக்கும் வகையில் நமது இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது அவசியமாகும். நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகும்” என்றார். தொடர்ந்து பால புரஸ்கார் விருது பெற்ற சிறுவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டு சிறுமிக்கு பால புரஸ்கார் விருது
கலை மற்றும் கலாச்சாரம், வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய 7 பிரிவுகளில் சிறப்பான சாதனைகள் புரிந்த சிறுவர்களுக்கு பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. இதில் கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஹரி கதைகள் கதாகாலட்சேபம் செய்வதில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுமி ஜனனி நாராயணன் உட்பட 17 சிறுவர், சிறுமிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி பாராட்டினார். அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ், பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.