புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று யுபிஐ ஸ்தம்பித்ததால் பணம் செலுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர். நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. குறிப்பாக யுபிஐ வழியாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் வழியாக பணப்பரிவர்த்தனை அதிகமாக நடந்து வருகிறது. நேற்று இரவு 7.45 மணி அளவில் யுபிஐ முடங்கியது. இதனால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்டவை வழியாக பயனர்கள் பணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.
இரவு 8.30 மணியளவில், சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன்டெடெக்டரில் 2,147 செயலிழப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகார்களில் கிட்டத்தட்ட 80% பணம் செலுத்த முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்களைக் குறிப்பிட்டன. இந்த கோளாறு எச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிகளில் பரிவர்த்தனைகளை பாதித்தது.