புதுடெல்லி: கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அரசியலமைப்பின் முக்கியத்துவம், அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 26ம் தேதி நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 2.63 லட்சம் பஞ்சாயத்துகளால் அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படும் என்றும், அரசியலமைப்பின் முகவுரை உள்ளூர் மொழிகளில் படிக்கப்படும் என்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய அரசியலமைப்பு தினத்தை மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்துகள் உள்ளூர் மொழிகளில் முகவுரையை பெருமளவில் வாசிப்பதோடு, அரசியலமைப்பு மதிப்புகள் குறித்த விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் வினாடி வினாக்களும் நடக்கும். நாடு தழுவிய அரசியலமைப்பு இணைப்பு முகவுரை வாசிப்பு தொடர் ஒளிபரப்பு காலை 10 மணி முதல் மாலை 6.45 மணி வரை நடைபெறும். இதில் ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் 15 நிமிட பிரிவில் இணைகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.



