Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் நடக்கும் தேர்தல்களில் பாஜ, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

ஆரா: பீகார் மாநிலத்தில் ராகுல்காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று ஆரா பகுதியில் அவரது பயணம் நடந்தது. அங்கு அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல். பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நமது நாட்டில் வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன. இதை எதிர்த்து பீகாரில் இருந்து தொடங்கிய வாக்காளர் அதிகார யாத்திரை மக்களின் வாக்குகளை திருடுவதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கமாக மாறும். மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வாக்குகளைத் திருடுவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றது.

ஆனால், பீகாரில் ஒரு வாக்கு கூட பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தால் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வாக்களிப்பது தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமை. ஆனால் மோடி அரசு தேர்தலில் வெற்றி பெற வாக்குகளைத் திருடுகிறது. வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட உத்தரவாதம். ஆனால் பாஜ மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதன் மூலம் அதைத் தாக்குகிறது. இனிமேல் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் வாக்குகளைத் திருட பாஜவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இப்போது, ​​மக்கள் பாஜ தலைவர்களை வாக்கு திருடர்கள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* நான் தான் முதல்வர் வேட்பாளர்

ராகுல் யாத்திரையில் தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’ நான் தான் முதல்வர் வேட்பாளர். தேஜஸ்வி முன்னேறி வருகிறார். அரசாங்கம் பின்னால் பின்தொடர்கிறது. உங்களுக்கு அசல் முதல்வர் வேண்டுமா அல்லது போலி முதல்வர் வேண்டுமா?’ என்று கேட்டார்.

* நாளை பிரமாண்ட பேரணி

ஆகஸ்ட் 17 ஆம் தேதி பீகார் மாநிலம் சசாரமில் இருந்து தொடங்கப்பட்ட ராகுல்காந்தியின் யாத்திரை 25 மாவட்டங்களை கடந்து சென்று தற்போது தலைநகர் பாட்னாவை நெருங்கி உள்ளது. நாளை( செப்டம்பர் 1 ஆம் தேதி) பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் சிலை வரை பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் தேஜஸ்வி, தீபங்கர் பட்டாச்சார்யா, முகேஷ் சாஹ்னி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

* திரிணாமுல் தலைவர்கள் நாளை பங்கேற்கிறார்கள்

செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் வாக்காளர் அதிகார யாத்திரை நிறைவு பயணத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரரும், எம்பியுமான யூசுப் பதான் மற்றும் லலிதேஷ் திரிபாதி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ராகுல் யாத்திரையில் அகிலேஷ்யாதவ்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்றார். சரண் மாவட்டத்தில் நடைபெற்ற யாத்திரையில் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா ஆகியோருடன் அவர் பயணம் மேற்கொண்டார்.

* அடுத்த முதல்வர் தேஜஸ்விதான்

ஆரா பகுதியில் நடந்த யாத்திரையில் உபி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ்யாதவ் பேசுகையில்,’ வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவுடன் நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். அவர் அடுத்த அரசாங்கத்தை அமைத்து பீகாரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லட்டும். ’ என்றார்.