புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மாத்திரைகள் தயாரித்து விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் வசித்து வந்த திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை, குருமாம்பேட், திருபுவனை உள்ளிட்ட இடங்களில் போலி மாத்திரை தொழிற்சாலை நடத்தி, புதுவையில் பல்வேறு குடோன்கள் மூலம் சப்ளை செய்து வந்துள்ளார். தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார், மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் தொழிற்சாலை, குடோன்களில் சோதனை நடத்தி ரூ.50 கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள், ரூ.14 கோடி மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள், மூலப்பொருட்களை கைப்பற்றி சீல் வைத்தனர்.
மேலும், ரெட்டியார்பாளையம் ஜெயாநகரில் உள்ள ராஜா வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், மருந்து இன்வாய்ஸ் ரசீதுகள், டைரி, பாஸ்போர்ட், ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலி மாத்திரை வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜா (எ) வள்ளியப்பன் மற்றும் வழக்கில் தொடர்புடைய அரியூர் அடுத்த சிவராந்தகம் பகுதியை சேர்ந்த விவேக் ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என நிபந்தனையின்பேரில் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் ஆகியோர் நேற்று மாலை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தொடர்ந்து, அவர்களை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், விசாரணைக்காக உருளையன்பேட்டையில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நேற்று மாலை 4 மணி முதல் இன்று காலை 6 மணி வரை விசாரித்தனர். அப்போது விசாரணையில் ராஜா போலீசாரிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மருந்து தொழில் துவங்கியபோது சரியாக லாபம் இல்லை. இதையடுத்து போலி மருந்து விற்பனை செய்ததில் கடந்த 6, 7 ஆண்டுகளாக நல்ல லாபம் கிடைத்தது. புதுவையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தமிழக, கேரளா மாநிலங்களில் விற்பனை செய்து வந்ததாலும், வட மாநிலங்களில் அதிகமாக சப்ளை செய்யப்பட்டது.
மேலும், புதுவையில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ராஜா மற்றும் விவேக் சரணடைந்த தகவல் அறிந்த உத்திரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா, மிசாப்புரா போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல இன்று அல்லது நாளைக்குள் புதுவை வர திட்டமிட்டுள்ளனர். மேலும், ராஜா பெயரில் சுமார் 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருந்தும், அதில் தற்போது பணம் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, மேற்கூறிய வங்கி கணக்கிலிருந்த கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை செய்துள்ளார். அதில், யார், யாருக்கு பணம் பரிவர்த்தனை செய்தார்? என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்ட வருகிறது.
இதனிடையே, சிபிசிஐடி போலீசாரிடம் ராஜா அளித்த தகவலின் அடிப்படையில், புதுவையில் தயாரிக்கப்பட்ட வடமாநிலங்களில் சப்ளை செய்யப்பட்டுள்ள போலி மருந்துகள் அனைத்தையும் விற்பனை செய்ய தடை விதிக்கக்கோரி புதுச்சேரி மருந்து தர கட்டுபாடு துறை மூலம் மத்திய மருந்து தர கட்டுபாடு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிறப்பு புலான்யவு குழு நேற்று கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து கொண்டு வருவதாகவும், விசாரணையில் அவர்களிடம் விசாரணை நடத்தி திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


