சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மு.பன்னீர்செல்வம் பேசுகையில், திருப்புங்கூர் சிவலோகநாதர் ஆலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. எப்போது குடமுழுக்கு நடத்தப்படும் என்றார். இதற்கு பதில் அளித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
திருக்கோயில்கள் புனரமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து எந்த காலத்திலும் ஏற்படாத ஒரு எண்ணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உதித்திட்டதன் காரணமாக ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் இதுவரை ரூ.425 கோடி ரூபாயினை அரசின் சார்பில் நிதியாக வழங்கினார். இத்துடன் கூடுதலாக உபயதாரர் நிதி, பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி சேர்த்து ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் சுமார் 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் 71 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதர ஆயிரம் ஆண்டு திருக்கோயில்களின் பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்கை முடித்து ஒரு வரலாற்று பெருமையை படைத்து இந்த மாமன்றத்தில் தெரிவிப்போம். உறுப்பினர் கோரிய அந்த திருக்கோயிலின் திருப்பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும் ஜனவரி மாத இறுதியில் அந்த திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறும்” என்றார்.