இருமல் மருந்து சாப்பிட்டு 14 குழந்தைகள் பலி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி டிரான்ஸ்பர்: மபி அரசு நடவடிக்கை
போபால்: மபியில் இருமல் மருந்து சாப்பிட்டு 14 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். மபி, ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு உடல் நலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மபி, சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருமல் மருந்தின் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டதில் அதில் அதிக நச்சு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கோல்ட்ரிப் மருந்துக்கு மபி உள்பட பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
கோல்ட்ரிப் மருந்தை பரிந்துரை செய்த சி்ந்த்வாரா அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மபி முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை உயர் அதிகாரி தினேஷ் மவுரியாவை மாநில அரசு இடமாற்றம் செய்துள்ளது. மேலும் மருந்து ஆய்வாளர்களான கவுரவ் சர்மா,சரத் குமார் ஜெயின் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர் ஷோபித் காஸ்டா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.