Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட மருந்து சாப்பிட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ‘ஸ்ரீசன் பார்மா’ என்ற மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ என்ற வகையை சேர்ந்த இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்தது சோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இந்த மருந்தில் அதிகளவில் ‘டை எத்திலீன் கிளைசால்’ நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 100 மடங்கு சேர்க்கப்பட்டதால் இந்த இறப்பு தெரியவந்தது. 22 குழந்தைகள் உயிரிழப்பை அடுத்து மருந்து நிறுவனம் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின்படி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் தயாராகும் 3 தரமற்ற இருமல் மருந்துகளான ‘கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டிஆர், ரீலைப்’ ஆகியவற்றில் ஏதேனும் உங்களிடம் இருந்தால், அவற்றை பயன்படுத்த வேண்டாம்.

தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் சந்தையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் அவை தங்கள் நாட்டில் கண்டறியப்பட்டால் உடனடியாக உலகெங்கிலும் உள்ள தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். தரமற்ற இருமல் மருந்துகளை பயன்படுத்தி ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது எதிர்பாராத பக்க விளைவை சந்தித்து இருந்தால், உடனடியாக சுகாதார பாதுகாப்பு நிபுணரிடம் மருத்துவ ஆலோசனை பெறவும் அல்லது விஷ கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளவும்” என கேட்டுக்கொண்டுள்ளது.