Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெரி காஸ்ட்லி டீ!

பௌர்ணமியில் பறிக்கப்படும் தேயிலை!

நமது அன்றாடங்களைத் துவக்கி வைக்கும் பானமான தேநீர், மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. இத்தகைய தேநீர் தயாரிப்பிற்கு அடிப்படையான தேயிலைகள் மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டு, அங்கிருக்கிற மக்களால் அறுவடை செய்யப்பட்டு பிறகு டீத்தூளாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது நமக்கு நன்றாக தெரியும். எல்லா நாட்களிலும், எல்லாப் பருவத்திலும் விளையும் தேயிலைகள்தான் வருடம் முழுவதும் நமக்கு தேநீர் தயாரிக்கப் பயன்படுகிறது எனவும் நாம் நினைத்து வருகிறோம். அது உண்மைதான் என்றாலும் நமக்குத் தெரியாத சில ஸ்பெஷல் தேயிலை ரகங்கள் இருக்கின்றன என்பதும் இன்னொரு உண்மை. ஆம்., உங்களுக்குத் தெரியாத சில புதிய வகை தேயிலையைப் பற்றி அறிமுகம் செய்யப்போகிறோம். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.சில்வர் டிப்ஸ் இம்பீரியல் டீ. யாராவது இந்தத் தேயிலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதைப்பற்றி, தெரிந்திடாத நபர்களுக்கு இந்தச் செய்தி வியப்பூட்டக் கூடியதாக இருக்கும். ஆம், இந்த டீ பெரும்பாலும் டார்ஜிலிங் டீ என அறியப்படுகிறது. வெஸ்ட் பெங்காலில் இருக்கிற டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மகாய்பரி டீ எஸ்டேட்.

இந்தியாவின் பழமையான வரலாற்றைக் கொண்ட டீ எஸ்டேட்டுகளில் இதுவும் ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாய்பரி டீ எஸ்டேட்டில் விளையக்கூடிய ஒருவகை தேயிலைதான் சில்வர் டிப்ஸ் இம்பீரியல் டீ. இந்தத் தேயிலையை மற்ற தேயிலையைப் போல பறிக்க முடியாது. ஏனெனில், இந்தத் தேயிலைச் செடிகளில் இருந்து தேயிலை பறிப்பதற்கு சரியான சீதோஷ்ண நிலை தேவை. பகல் நேரத்திலோ அல்லது வெயில் நேரத்திலோ இந்தத் தேயிலைகளைப் பறிக்கக்கூடாது. ஏனெனில், அவ்வாறு வெயில் நேரத்தில் பறித்தால், இந்த வகை தேயிலையில் இருந்து சுவையான தேநீர் கிடைக்காது. இதனால், இரவு நேரங்களில் குறிப்பாக பெளர்ணமி நாட்களில் மட்டுமே சில்வர் டிப்ஸ் இம்பீரியல் தேயிலை அறுவடை செய்யப்படுகிறது. இந்தத் தேயிலையை பறிப்பதற்காகவே அந்த ஊரில் இருக்கிற சில அனுபவம் வாய்ந்த பூர்வகுடிகள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து இந்தத் தேயிலை பறிக்கப்படுகிறது. அதுவும், வருடத்திற்கு 50ல் இருந்து 100 கிலோ வரை மட்டும்தான் அறுவடை செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படுகிற தேயிலைகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பணக்கார நபர்களால் வாங்கப்பட்டு தேநீராக சுவைக்கப்படுகிறது. இந்தத் தேயிலையின் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு கிலோ வெறும் 2325 டாலர்தான். அதாவது நமது ஊர் மதிப்பிற்கு சுமார் 2 லட்சம்.