SPF (Sun Protection Factor) சன் ஸ்க்ரீன்களின் இந்த அளவீடுகளைத்தான் பார்த்து வாங்குவோம், Ph லெவல் (Potential of Hydrogen) என்பது நாம் பயன்படுத்தும் சோப், ஷவர் ஜெல், உள்ளிட்டவற்றில் உள்ள அமிலத் தன்மை அளவீடுகளைக் குறிக்கும். அதைப் பொறுத்து நாம் குளியலுக்கான ஜெல், வாஷர்கள் வாங்குவதுண்டு. இவையிரண்டும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் திடீரென இன்ஸ்டா ரீல்கள், யூடியூப் ஷாட்கள் என வரும் காஸ்மெட்டிக் விளம்பரங்கள், சரும க்ரீம்களுக்கான புரமோஷன்களில் இந்த AHA, BHA, PHA என்னும் அளவீடுகளைப் பார்க்க முடிகிறது. காஸ்மெட்டிக்குகளில் இவற்றின் வேலை என்ன, திடீரென இவை விளம்பரங்கள் வரை வரக் காரணம் என்ன? எந்த சருமத்துக்கு என்ன அளவீடு விளக்குகிறார் அரொமா தெரபிஸ்ட் கீதா அசோக்.“ஏஎச்ஏ”, “பிஏஎச்ஏ”, “பிஹேச்ஏ” எனும் மூன்று எழுத்துகளும் சரும ஆரோக்கியத்துக்கான ஃபார்முலாக்கள். முகம் பளபளக்கும், தழும்புகள் மாயமாகும், பாக்டீரியா ஓடும் என விளம்பரங்கள் இவை குறித்து தெரிவிக்கின்றன. இவை பல குழப்பங்களையும் கூட உருவாக்கிவிடுகிறது. முதலில் இவற்றின் வேலை மற்றும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
AHA - ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் (Alpha Hydroxy Acid)
AHA என்பது பழங்கள், தாவரங்கள், போன்ற இயற்கைப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலம். இவை மென்மையான எக்ஸ்ஃபோலியண்ட் (சரும மேற்புறத் தோல் நீக்கி). சருமத்தின் மேல் படிக்கட்டடிக்குள்ளே ஒட்டியிருக்கும் இறந்த செல்களை நீக்கி வெளியேற்றும் பணியில் இது வல்லமை பெற்றது.
பயன்கள்:
* சுருக்கங்கள் குறைப்பு
* பளிச்சென்ற தோல் தோற்றம்
* சீரான சரும நிறம்
* பிக்மெண்டேஷன் (கருந்திட்டுகள்) குறைப்பு
வழக்கமாகப் பயன்படும் AHA ஆசிட் வகைகள்:
* கிளைக்காலிக் ஆசிட் (Glycolic Acid) - கரும்பு ஜூஸ்
* லாக்டிக் ஆசிட் (Lactic Acid) - பால், தயிர்
* சிட்ரிக் ஆசிட் (Citric Acid) - எலுமிச்சை, ஆரஞ்சு
எச்சரிக்கை: AHA க்ரீம்கள், டோனர்கள், சீரம்கள் உபயோகிக்கும் போது சன் ஸ்க்ரீன் கிரீம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் . கிட்டத்தட்ட மேற்புற தோல் இதில் நீக்கப்படுவதால் SPF-30 அல்லது அதற்கு மேல் அளவீடு உள்ள சன் ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம்.
BHA - பீட்டா ஹைட்ராக்ஸி ஆசிட் (Beta Hydroxy Acid)
BHA என்பது எண்ணெய் நீக்கும் திறனுடைய அமிலம். இது ஆயில் பிசுக்கு சருமம் மற்றும் பருக்கள் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
முக்கிய BHA:
* சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) - ஆற்றுப்பாலை (willow bark) மரத்திலிருந்து பெறப்படுகிறது .பெர்ரிகள், தக்காளி, காபி பவுடர்களில் பெறலாம்.
பயன்கள்:
* எண்ணெய்ப் பிசுக்கு நீக்கம்
* நீண்ட நேர எண்ணெய் கட்டுப்பாடு
* மூக்கின் மேலான கறுப்பு புள்ளிகள் நீக்கம்
* தோலுக்குள் நுழைந்து பாக்டீரியா நீக்கம்
எச்சரிக்கை: BHA அதிகம் உபயோகித்தால் தோல் உலர்வு, வறட்சி, ஏற்படலாம். வாரத்திற்கு 2 அல்லது 3 முறைகள் போதுமானவை. இயற்கையாகவே வறண்ட சருமம் உள்ளவர்கள் சரும நிபுணர்கள் ஆலோசனைகள் பெற்று BHA க்ரீம்கள், சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது.
PHA - பாலிஹைட்ராக்ஸி ஆசிட் (Poly Hydroxy Acid)
PHA என்பது AHAக்கு மாற்றாக மெதுவாக வேலை செய்யும் அமிலம். இது சென்ஸிடிவ் ஸ்கின் (sensitive skin),அலர்ஜி, உடையவர்களுக்கான பாதுகாப்பான தேர்வு.
பயன்கள்:
* மென்மையான எக்ஸ்ஃபோலியேஷன்(இறந்த செல் நீக்கம்)
* ஹைட்ரேஷன் (ஈரப்பதம்) அதிகரிப்பு
* தோல் தடிமன் அல்லது கரும்புள்ளி குறைப்பு.
உதாரணம்:
* குளுகோனோலாக்டோன் (Gluconolactone) - தேன், பழச்சாறுகள், யோகர்ட், ஒயின்
* லாக்டோபயோனிக் ஆசிட் (Lactobionic Acid) - பால்
PHA வலி, எரிச்சல், வறட்சி போன்ற பாதிப்புகள் இல்லாமல் பலன்களை மெதுவாகக் கொடுக்கும்.
எதை எப்போது பயன்படுத்தலாம்?
சரும வகை ஏற்ற அமிலம் பயன்படுத்தும் பரிந்துரை
உலர்ந்த சருமம் AHA (Lactic) வாரத்திற்கு 2 முறை
எண்ணெய்ச் சருமம் BHA (Salicylic) தினசரி அல்லது ஒவ்வொரு நாளும் சென்ஸிடிவ் PHA தினசரி பயன்படுத்தலாம் அக்னே/பிம்பிள் BHA + AHA combo மருத்துவர் பரிந்துரை அவசியம்
சிறந்த பயன்படுத்தும் முறைகள்:
* எந்தக் க்ரீம் பயன்படுத்தினாலும் முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு இவற்றை பயன்படுத்தவும்
* தினசரி மாய்ச்சுரைசர் மற்றும் சன் ஸ்க்ரீன் தவறாமல் சேர்க்கவும்
* எஸ்போலியேஷன் சீரம் (Exfoliation serums) (அமிலங்கள்) மற்றும் ரெட்டினால் (Retinol) ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் .தோல் எரிச்சல் ஏற்படலாம்)
AHA, BHA, PHA ஆகியவை எந்த வகை ஸ்கின்கேர் பொருட்களில் (cosmetics or skincare) அடங்கியிருக்க வேண்டும் என்பதையும், அவற்றின் சரியான சதவீத அளவையும் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அளவு மிகுந்தாலோ, குறைந்தாலோகூட சருமத்தில் எதிர்வினை ஏற்படலாம்.
இங்கே சரும பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் அதற்கேற்ற AHA / BHA / PHA அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன:
சருமம் வாஷ்கள் (Face Wash / Cleanser)
பயன்: மென்மையான தினசரி எக்ஸ்ஃபோலியேஷன்
* AHA: 2% - 5%
* BHA (Salicylic Acid): 0.5% - 2%
* PHA: 2% - 5% டோனர்கள்/எஸ்போலியேடிங் பேட்ஸ் (Toner / Essence / Exfoliating Pads)
பயன்: தோலின் மேல் இறந்த செல்களை அகற்ற, பளிச் தோலை பெற உதவும். (பொதுவாக டோனர்கள் சரும மருத்துவ உலகில் பரிந்துரை செய்யப்படுவதில்லை)
* AHA: 5% - 10% (Glycolic/Lactic)
(உலர் சருமம்)
* BHA: 1% - 2% (முக்கியமாக எண்ணெய் சருமத்துக்கு)
* PHA: 3% - 5% (Sensitive skin)
AHA + BHA காம்போ டோனர்கள் இருக்கலாம் - ஆனால் நாள் ஒன்றுக்கு ஒரே முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சீரம்கள்/சரும சிகிச்சை ஜெல் அல்லது க்ரீம்கள் (Serum / Treatment Gel / Peel Solutions)
பயன்: சருமத்துக்கு அடியில் உள்ள பிரச்னைகளுக்கான சிகிச்சைகள்
* AHA: 10% - 15%
* BHA: 2% - 4%
v PHA: 5% - 10%
இதில் நிறைய சரும ஆசிட் செயல்பாடு இருக்கும். புதியவர்கள்) 5% AHA அல்லது 1% BHA முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கலாம்.
சரும மாஸ்க்
(Leave-on Masks / Overnight Peels)
பயன்: இரவில் பயன்படுத்தி, பள பளப்புடன் விழிப்பதற்கான deep exfoliation
* AHA: 10% - 20%
* PHA: 10% வரை
* BHA: சாதாரணமாக 2% தாண்டக் கூடாது
இது வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிகமாகவோ, தினசரி பயன்படுத்தினாலோ தோல் வறட்சி, எரிச்சல் ஏற்படும்.
மாய்ஸ்ச்சுரைசர்/ லோஷன்கள்
(Moisturizer / Lotion / Creams)
பயன்: தினசரி சருமத்துக்கான ஊட்டம், மென்மையான exfoliation- ஐயும் கொடுக்கும்
* AHA: 3% - 5%
* PHA: 5% வரை
* BHA: 0.5% - 1%
இது சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றது, ஏனெனில் மிகவும் மென்மையாக, மெதுவாக செயல்படும்.
காஸ்மெட்டிக் வாங்கும் போது முக்கியமாக பார்க்க வேண்டியவை
(Label Reading Tips):
1. pH அளவு: AHA/BHA செயல்பட pH 3.5-4.0 இடைப்பட்டிருப்பது சிறந்தது.
2. தினந்தோறுமான பயன்பாடு என குறிப்பிட்டிருந்தால் இவற்றின் சதவீதம் குறைவாகவே இருக்கும்.
3. Dermatologically tested / non-comedogenic / fragrance-free என இருந்தால், சென்ஸிடிவ் தோலுக்கு பாதுகாப்பானது.
4. சூரிய ஒளி எதிர்ப்பு தேவையானது (Sunscreen Must) எனக் குறிப்பிட்டிருந்தால் AHA/BHA பயன்படுத்தும் போது SPF 30+ சன் ஸ்க்ரீன் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.AHA, BHA, PHA என்பவை உங்கள் தோலைப் புதுப்பிக்க உதவும் மூலக்கூறுகள்தான் அவ்வளவே. எப்படி மருந்துகள், மசாலா பொடிகளின் Ingredients பகுதியை வாசிக்கிறோமோ அப்படி இவை காஸ்மெட்டிக்ஸ் உட்சேர்ப்பு பொருட்கள். எந்த க்ரீம், சீரம், டோனர், லோஷன்கள் வாங்கினாலும் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படியுங்கள். ஆனால், ஒவ்வொரு சருமமும் தனித்துவமுடையது என்பதால் விவரங்களைப் படித்து பயன்படுத்துவது நல்லது. இல்லையேல் தகுந்த நிபுணர்கள் ஆலோசனைகள் பெறுவது அவசியம்.எப்படி சன் ஸ்கீரீன், சோப், ஷவர் ஜெல் உள்ளிட்டவைகளுக்கு SPF, Ph அளவீடு பல வருடங்களாக நாம் காண்கிறோமோ. இப்போது அந்த வரிசையில் இந்த AHA, BHA, PHA அளவீடுகளும் இணைந்துள்ளன. இவை எல்லாம் புதிய வரவு கிடையாது. முன்பு சரும நிபுணர்களுக்கு மட்டுமே தெரிந்த அளவீடுகள், இப்போது கல்வியறிவு, பொது அறிவு காரணமாக பொதுமக்களுக்கிடையேயும் இது குறித்த விழிப்புணர்வுகள் உருவாகத் துவங்கியிருக்கிறது.
- ஷாலினி நியூட்டன்