புதுடெல்லி: ரூ.2,796 கோடி ஊழல் வழக்கில் அனில் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கும், யெஸ் வங்கி மற்றும் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராணா கபூரின் குடும்ப நிறுவனங்களுக்கு இடையே நடந்த மோசடி பரிவர்த்தனைகள் தொடர்பாக யெஸ் வங்கிக்கு ரூ.2,796 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அனில் அம்பானி, ராணா கபூர் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அம்பானி அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, ராணா கபூர், பிந்து கபூர், ராதா கபூர்,
ரோஷ்னி கபூர் ஆகியோர் மீதும் எப்எல், ஆர்ஹெச்எப்எல், ஆர்ஏபி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட், பிளிஸ் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் ஹேபிடேட் பிரைவேட் லிமிடெட், இமேஜின் ரெசிடென்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மோர்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் ராணா கபூரின் ஒப்புதலின் பேரில் யெஸ் வங்கி மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மற்றும் வணிகக் கடன்களில் சுமார் ரூ.2,045 கோடியையும், வணிகப் பத்திரங்களில் ரூ.2,965 கோடியையும் முதலீடு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த மோசடி ஏற்பாட்டின் விளைவாக யெஸ் வங்கிக்கு ரூ. 2,796.77 கோடி அளவுக்கு மிகப்பெரிய தவறான இழப்பு ஏற்பட்டது. அதே சமயம் அனில் அம்பானியின் பிற நிறுவனங்களுக்கும் ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் சட்டவிரோத லாபம் கிடைத்தது என்று கூறப்பட்டுள்ளது.