தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர் பட்டியிலில் தீவிர திருத்த பணிகள் என்ற பெயரில் ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்தை கையில் வைத்து கொண்டு பீகாரில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியது. இதை ராகுல்காந்தி அப்பட்டமாக வெளிகொண்டு வந்து, வாக்கு திருடர்களை அடையாளப்படுத்தி பிரமாண்ட பேரணியும் நடத்திக்காட்டினார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், இப்போது தமிழ்நாட்டிலும் அத்தகைய நாடகங்ளை அரங்கேற்ற தேர்தல் ஆணையம் முன்வந்துவிட்டது. சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் சரிபார்ப்புகளில் எவ்வித வௌிப்படைத்தன்மையும் இல்லை.
அதே சமயம் வாக்காளர்களை விதிமுறைகள் என்கிற அடிப்படையில் குழப்பி, சிறுபான்மை வாக்குகளையும், தமிழ்நாட்டில் ஆளும் தரப்புக்கான ஆதரவு வாக்குகளையும் மெல்ல மெல்ல நீக்கிவிடுவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தும் என்கிற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக ஆதார் அட்டையை 12வது ஆவணமாக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்தல் ஆணையம் அதற்கு சில நிபந்தனைகளை விதித்து போக்கு காட்டுகிறது.
வாக்காளர் பிறந்த தேதி குறித்த ஆவணங்களை வாக்குப்பதிவு அதிகாரி கேட்கும்போது அளிக்க வேண்டும் போன்ற அறிவிப்புகள், தேர்தல் ஆணையத்திற்கு சாதகமான அம்சங்களாகும். பிறந்த தேதியை குறிப்பிட்ட காலத்தில் அவர் அளிக்கவில்லை என்பதை காரணம் காட்டி ஒருவரது வாக்குரிமையை பறித்துவிட முடியும். இது மட்டுமின்றி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு இது சரியான காலமாக தென்படவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களாகும்.
இக்காலக்கட்டத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளை தீவிரமாக மேற்கொள்வர். அதை தொடர்ந்து ஜனவரி மாதம் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. இக்காலக்கட்டத்தில் திருத்த பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டால், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பணிகளை வருவாய்துறையினர் மேற்கொள்ள முடியாமல் போகும் சூழல் உள்ளது. வாக்காளர் பட்டியல்களை திருத்தவும், புதியதாக தயாரிக்கவும் போதிய கால அவகாசம் இல்லாதபோது, பலரை நீக்கவும், புதியதாக சேர விரும்புவோரை இணைக்க முடியாமலும் போகும்.
தேர்தல் ஆணையம் அறிவிக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஒருவகையில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் மறைமுக திட்டமாக பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு, சட்டவிரோத வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சீராய்வை நிறுத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பது என முடிவெடுக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும்போதெல்லாம், மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் படியேறி வெற்றி கண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாக்குரிமையை குறி வைத்து தாக்குதல் நடத்தும் தேர்தல் ஆணையத்திற்கு ஏதாவது ஒரு வகையில் புத்தி புகட்ட வேண்டும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
