சென்னை: சூளை ராகவா தெருவை சேர்ந்தவர் தேவகி (80). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் தேவகி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒருவர், ‘நான் சென்னை மாநகராட்சியில் இருந்து வருகிறேன்,’ எனக்கூறி தன்னை அறிமுகம செய்து கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளார். பிறகு திடீரென அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி, தேவகி கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பிறத்து கொண்டு தப்பினார்.
இதுகுறித்து தேவகியின் மகன் கண்ணன் (54) வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) என்று தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு பணம் இல்லாததால் செயின் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, அருண்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.