* அலுவலர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கடலூர் : சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் போன்ற பல்வேறு சாலை பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
கடலூர் மாநகராட்சி, குறிஞ்சிப்பாடி, வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் மோகன் கூறுகையில், தமிழக முதல்வர், பொதுமக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
பொதுமக்களின் தேவை கருதி பல்வேறு திட்டங்களின் கீழ் புதிதாக சாலைகள் அமைக்கப்படுவதுடன், வளர்ந்துவரும் மக்கள்தொகை பெருக்கம் மற்றும் அதிக வாகனங்களின் பயன்பாடு காரணமாக ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்த்திடும் பொருட்டு சாலைகள் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளில் வெங்கட்ராமன் தெருவில் 0.216 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.9.27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், சாலையின் உறுதி தன்மை மற்றும் தரம் குறித்தும், குண்டு உப்பலவாடி சாலை 850 மீட்டர் நீளத்திற்கும் 4.5 மீட்டர் அகலத்திற்கு மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயிக்குப்பம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.61.65 லட்சம் மதிப்பீட்டில் சின்ன தோப்பு கொல்லை-ஆயிக்குப்பம் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்-விருத்தாச்சலம்-சேலம் நெடுஞ்சாலை எண்.532 சாலையில் ரூ.294.70 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையிலிருந்து 42.69 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10.97 கி.மீ நீளத்தில் வெள்ள நீர் வடிகால் வசதி, 1450 மீ நீளமுள்ள தடுப்புச் சுவர், 14 குழாய் பாலங்கள், 44 சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் எஸ்.கே.எஸ் நகரில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 66.07 லட்சம் மதிப்பீட்டில் 1.899 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.186 லட்சம் மதிப்பீட்டில் 4.859 கி.மீ நீளமுள்ள சிமெண்ட் கான்கீரிட் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருங்கூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.281.83 லட்சம் மதிப்பீட்டில் சொரத்தூர்-வி.கே.டி சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தேவகி மற்றும் தாயரம்மாள் நகர்களில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.181 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி விஐபி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.124 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சாலை பணிகள் மேற்கொள்ளும்போது அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவில் தரமாகவும், குறிப்பிடப்பட்டுள்ள அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். சாலைகளின் பக்கவாட்டில் தேவைக்கேற்ப வடிகால்கள் அமைத்திட வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் போன்ற பல்வேறு சாலைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் அனு, மாநகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன், வடலூர் நகராட்சி ஆணையர் ரஞ்சிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, மீராகுமாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.