*நீதி விசாரணைக்கு சிறந்த உதாரணம் என அருங்காட்சியக காப்பாளர் தகவல்
ஈரோடு : ஈரோட்டில் கிடைத்த செப்பு பட்டயம் திப்பு சுல்தான் காலத்தின் தீர்ப்பு பட்டயம் என்பதும், அது நீதி விசாரணைக்கு சிறந்த உதாரணமாக இருப்பதாகவும் அரசு அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி தெரிவித்துள்ளார்.ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்யா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் பழங்கால செப்பு பட்டயம் கிடைத்தது.
இதையடுத்து ஈரோடு அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி, அங்கு சென்று செப்பு பட்டயத்தை நேரில் ஆய்வு செய்தார். அது 1796ம் ஆண்டின் செப்பு பட்டயம் என்பதும், 26 சென்டி மீட்டர் நீளமும், 20 சென்டி மீட்டர் அகலமும் 950 கிராம் எடையும் உடையது. அதில், இருபுறமும் வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதும் அறியப்பட்டது.
தொடர்ந்து, அந்த பட்டயத்தை ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தணிக்கை செய்து ஈரோடு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இதில், திப்பு சுல்தான் காலத்து தீர்ப்பு பட்டயத்தில் இருதரப்புக்கும் உண்டான பிரச்னைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து வாசகங்கள் கண்டறியும் முயற்சியில் அருங்காட்சிய காப்பாளர் ஈடுபட்டார்.
இந்நிலையில், தீர்ப்பு பட்டயத்தில் உள்ள வாசகங்கள் நீதி விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட்டு, ஒருவருக்கு நீதி வழங்கியும், மற்றொருவருக்கு அபராதத்துடன் தண்டனை வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி கூறியதாவது:
ஈரோடு சிக்கய்யா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிடைத்த செப்பு பட்டயம், கி.பி.1796ம் ஆண்டு திப்பு சுல்தான் காலத்தை சார்ந்தது. அந்த பட்டயத்தில் இடங்கை, வலங்கையாருக்கு (இரு தரப்பு) உரிய தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. பட்டயத்தில், திருவாச்சியின் உள்ளாக நின்ற நிலையில் மாரியம்மன் உருவமும், அதன் இருபுறமும் சூரியன், சந்திரன் ஆகியவையும் கோட்டுருவமாக காட்டப்பட்டுள்ளன.
காவேரி ஆற்றின் நடுவில் அமைந்த சீரங்கபட்டணம் ஆட்சியாளராகிய அசரது நவாபு அயிதரல்லிக்கானு சாயெபு (ஐதர்அலி கான்) மகன் அசரது டிப்பு சுர்த்தான் பாச்சாவு என்று திப்பு சுல்தான் குறிக்கப்பட்டுள்ளார். அவரது பிரதிநிதி மீரு சாயிபு, கொங்குநாட்டு குறுப்புநாட்டு விசயமங்கலத்துக்கு (விஜயமங்கலம்) மாரியம்மன் திருவிழாவில் சீர்மை விசாரணைக்கு வந்திருந்தபோது, இருசாரரும் முறையிட்டுள்ளனர்.
இது குறித்து ஏற்கனவே காஞ்சிபுரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இருசாரரிடமும் பட்டயங்களாக இருப்பதை அறிந்து அவற்றை கொண்டு வர செய்து படித்து பார்த்ததில், இடங்கையாருக்கு உரிய சில சிறப்புகள் வலங்கையாளருக்கு உரியது என வலங்கை பிரிவை சேர்ந்த கவறை பெத்திசெட்டி கூறி வந்துள்ளார்.
இதை அறிந்து, அவருக்கு விலங்கிட்டு (காப்பு) 1,200 பொன் அபராதம் விதித்து, அவரவருக்குரிய உரிமைகளை எழுதி இடங்கையாரின் வெற்றிப்பட்டயமாக வைத்துக்கொள்ள உத்திரவிட்டப்பட்டுள்ளது.திப்பு சுல்தான் காலத்து நீதி விசாரணைக்கு இப்பட்டயம் சிறந்த உதாரணமாகும். இந்த பட்டயம் இன்னும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.
விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.இதே செப்பு பட்டயத்தின் வாசகங்கள், ஓலைப்பட்டயமாக ஏற்கனவே கிடைக்கப்பெற்று ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது என்பது தனி சிறப்பாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.