கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து: கலக்கலாய் சாதித்த கொலம்பியா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்; ஷூட் அவுட்டில் 5 கோலடித்து வெற்றி
குய்டோ: கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை, பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி, கொலம்பியா அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதின. இரு அணியினரும் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். ஆனால், சம பலம் மிக்க அணிகளாக இரண்டும் இருந்ததால் எளிதில் கோல் போட முடியவில்லை.
கடைசியில் இரு அணியினரும் கோல் போடாததால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட கொலம்பியா வீராங்கனைகள் 5 கோல்கள் போட்டு அசத்தினர். மாறாக, அர்ஜென்டினா அணி வீராங்கனைகளால் 4 கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால், 5-4 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து, இன்று நடக்கும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பிரேசில், உருகுவே அணிகள் மோதவுள்ளன. இதில் வெல்லும் அணியுடன், கொலம்பியா அணி, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும். முன்னதாக, 2வது இடத்துக்கான போட்டி, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கவுள்ளது.